கும்மிடிப்பூண்டியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் ஒன்று கூடிய மாணவர்கள்
கும்மிடிப்பூண்டியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் ஒன்றாக படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
கும்மிடிப்பூண்டி கே. எல். கே அரசு மேல்நிலைப்பள்ளியில் 1995ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த 117 மாணவர்கள் அவரது குடும்பத்தாருடன் ஒன்றுகூடிய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியில் 1995ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பில் 117 மாணவர்கள் படித்தார்கள். இந்த மாணவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு முன்னாள் மாணவர்கள் அமைப்பை ஏற்படுத்தி தங்கள் நட்பை வளர்த்துக் கொண்டனர். தொடர்ந்து இவர்கள் கே.எல். கே அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்த 25வது ஆண்டை நினைவு கூறும் வகையில் அனைவரும் ஒன்று கூடுவதற்கான முயற்சியை முன்னெடுத்தனர்
இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் தனியார் மண்டபத்தில் மேற்கண்ட 117 முன்னாள் மாணவர்கள் அவர்களது குடும்பத்தாரோடு ஒன்றுகூடி நெடுநாள் கழித்து இந்த சந்திப்பை ஒரு திருவிழா போல் கொண்டாடினர்.
இந்த நிகழ்வில் ஒவ்வொரு முன்னாள் மாணவரகள் அவரது குடும்பத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினர் . பின்னர் மாணவர்கள் தங்களது கடந்த கால பள்ளி பருவ நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அனைவரும் குடும்பத்துடன் உணவருந்தி பின்னர் கேளிக்கை விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தும், குழு படம் எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தனர். மேலும் நிகழ்வை ஒட்டி முன்னாள் மாணவர்களின் குடும்பத்தாருக்கு முன்னாள் மாணவர்கள் குழு சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த மாணவர்களோடு கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த டேனிஷ் என்ற மாணவர் படித்தார். அவர் தற்போது மேட்டுப்பாளையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வரும் நிலையில், அவர் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தனது கல்விக்காக மாணவர்கள் உற்சாகப்படுத்திய நினைவுகளை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சிறப்பான நிகழ்வு குறித்து இந்த நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகன வழக்கறிஞர் மணிகண்டன் தெரிவிக்கையில் கடந்த 5 ஆண்டுகளாக திட்டமிட்டு இந்த சிறப்பான நிகழ்வை 117 குடும்பத்தாருடன் நாங்கள் கொண்டாடியது பெருமகிழ்ச்சி அளிக்கிறது,
இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் நலனுக்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் உணவருந்தும் கூடம் அமைத்து தரப்படும் என்றார். மேலும் தங்களது மாணவர் குழு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கே.எல்.கே அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதோடு, வறுமையில் உள்ள மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்கு தங்கள் குழு சார்பில் உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் குழுவை சேர்ந்த வழக்கறிஞர் வி.கே.மணிகண்டன், பி.விஜயசங்கர், எச்.ஜோதிலிங்கம், எழிலன்,ரஜினிகாந்த், கமலஹாசன், சிவநேசன், குமாரராஜா, மீனாகுமார், ஜெய்சங்கர்,மதன்மோகன், காமராஜ், எஸ்.டி.கே.சங்கர், உலகநாதன்,உமாசங்கர், எம்.எஸ்.எஸ்.சரவணன்,அம்பிகாபதி உள்ளிட்ட பலர் முன்னின்று செய்திருந்தனர்.