கும்மிடிப்பூண்டி அருகே ஏரியில் பள்ளி மாணவி சடலமாக மீட்பு
கும்மிடிப்பூண்டி அருகே பத்து நாட்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவி ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்;
கும்மிடிப்பூண்டி அருகே பத்து தினங்களுக்கு முன்பு மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு, கொலை செய்து யாரேனும் உடலை ஏரியில் வீசி சென்றனர் ? காவல்துறையினர் விசாரணை,
ஆந்திர மாநிலம் பிச்சாடூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45) இவரது மனைவி திலகா (37). இவர்கள் இருவருக்கும் குடும்பத்தில் அடிக்கடி சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. குடும்ப சண்டை காரணமாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவி திலகா கணவர் செல்வராஜை விட்டு பிரிந்து சென்றார்.
தனது பதினைந்து வயது மகளான உஷா உடன் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள தனது அம்மா ஊரான நெல்வாய் கிராமத்தில் திலகா மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
சிறுமி உஷா பெரியபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சிறுமி உஷா பின்னர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. சிறுமியை காணவில்லை என்று பதறிய உறவினர்கள், பல்வேறு இடங்களிலும் மாணவி உஷாவை தேடி வந்ததாக கூறப்படுகிறது, எங்கு தேடியும் சிறுமி உஷா கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்த கொள்ளனுர் பகுதியில் உள்ள ஏரியில் சிறுமியின் சடலம் ஒன்று இருப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பாதிரிவேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதிரிவேடு காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்பகட்ட விசாரணையில், குளத்தில் மீட்கப்பட்ட சிறுமியின் உடல் நெல்வாய் கிராமத்தை சேர்ந்த சிறுமி உஷாவினுடையது என காவல்துறையினருக்கு தெரியவந்தது.
எனவே, இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காதல் விவகாரம் காரணமாக சிறுமி உஷா ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாளா? அல்லது அவளை யாரேனும் கடத்தி வந்து கொலை செய்துவிட்டு சடலத்தை ஏரியில் வீசி சென்றனரா என்று பல்வேறு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்து தினங்களுக்கு முன்பு மாயமான பள்ளி மாணவி ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவளது உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.