மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்..
கும்மிடிப்பூண்டி அருகே மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக மழை என தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஏராளமான ஏழை மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.
இதேபோல, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஓப சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சாலையின் கண்டிகை வில்லியர்ஸ் காலனி பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுமார் 86 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மழையால் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
தொடர் மழையின் காரணத்தினால் வாழ்வாதாரம் இழந்து வேலையில்லா திண்டாட்டத்தில் அவர்கள் பரிதவித்து வந்தனர். அவர்களுக்கு எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகை பேர் பகுதியில் இயங்கி வரும் அன்னை தெரசா கல்வி மருத்துவம் விளையாட்டு சமூக அறக்கட்டளையின் நிறுவன தலைவரும், முன்னாள் ஓய்வு பெற்ற ஊத்துக்கோட்டை வட்டாட்சியருமான டாக்டர் செல்வி இளவரசி முடிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து, கண்டிகை வில்லியர்ஸ் காலனியில் பழங்குடியின மக்கள் வசிக்கின்ற இடத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி 86 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி காய் கனிகள் குழந்தைகளுக்கு பால் பிஸ்கட் பிரட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை டாக்டர் செல்வி இளவரசி வழங்கினார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் செயலாளர் அழிஞ்சிவாக்கம் ரகு, பொருளாளர் பிரின்ஸ், நிர்வாகிகள் உமாபதி, லிசா, பாரதி, ஆதி முருகன், தியாகராஜன், மல்லிகா, சிராஜ், தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட பழங்குடின மக்கள் அன்னைதெரசா கல்வி, மருத்துவம் விளையாட்டு சமூக அறக்கட்டளையினருக்கு நன்றியை தெரிவித்தனர்.