கும்மிடிப்பூண்டியில் புதிய தொழிற்சாலை: சபாநாயகர் அப்பாவு திறப்பு..!
கும்மிடிப்பூண்டியில் புதிய தொழிற்சாலை ஒன்றை தொடங்கி வைத்தார் தமிழக சபாநாயகர் அப்பாவு.
தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளதால் திமுக கூட்டணி முழுமையாக வெல்லும். பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வுக்கு பிறகும் மீண்டும் மக்கள் பாஜகவிற்கு வாக்களிப்பார்களா? வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என்பதை எப்படி நம்ப முடியும்? கும்மிடிப்பூண்டியில் தனியார் தொழிற்சாலை திறப்பு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு பேட்டியில் இவ்வாறு கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் புதிய தொழிற்சாலை ஒன்றை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு தமிழ்நாட்டில் சிறு குறு தொழில் தொடங்குவதற்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இயந்திரங்கள் வாங்கிட தமிழ்நாடு அரசு சார்பில் 25% மானியம் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் சட்டசபையில் எதிர்கட்சி துணை தலைவர் நாற்காலி தொடர்பாக பிரச்சனை இல்லை என்றும், எதிர்கட்சி தலைவர் நாற்காலியை தவிர பிற இடங்கள் ஒதுக்குவது சபாநாயகரின் உரிமை என ஏற்கனவே முன்னாள் சபாநாயகர் தனபால் கூறியுள்ளதை அப்பாவு நினைவு கூர்ந்தார்.
ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்கிறது என்றும் அனால் விவசாய கடன், மாணவர் கல்வி கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது என குற்றம் சாட்டினார். உலக பணக்காரர் வரிசையில் உள்ள அதானிக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி தேவையா என கேள்வி எழுப்பிய அப்பாவு, நலிந்த நிலையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
முதல்வராக இருந்த போது குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா என மோடி கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது மாநிலங்களுக்கு தேவையான நிதியினை முறையாக வழங்கினாரா எனவும் வினவினார். தேர்தல் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அப்பாவு, தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளதால் திமுக கூட்டணி முழுமையாக வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.
50ரூபாய்க்கு பெட்ரோல் வழங்குவதாக கூறி 110ரூபாய்க்கு விற்கிறார்கள் எனவும், 450ரூபாய் இருந்த சிலிண்டர் 1100 ரூபாய் விற்கும் நிலையில் மீண்டும் மக்கள் வாக்களிப்பார்களா? எனவும், வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என்பதை எப்படி நம்ப முடியும் எனவும் சந்தேகம் தெரிவித்தார்.