தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் ஒன்றிய மாநாடு..!
பெரியபாளையத்தில் தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் 16-வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் 16-வது ஒன்றிய மாநாட்டில் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.6,750 ஆக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் எல்லாபுரம் ஒன்றிய கிளையின் 16-வது மாநாடு பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு, ஒன்றிய தலைவர் வெ.த.சிவலிங்கம் தலைமை தாங்கினார். டி.மாரிமுத்து, சி.துரை,ஜி.எஸ்.மேனகா, எஸ்.சாந்தி,பி.பவளரசி, ஆர்.நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஒன்றிய துணைத் தலைவர் எம்.ரவி வரவேற்றார்.மாவட்டச் செயலாளர் ஆர்.சுலோச்சனா கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் ஏ.சிவா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் எம்.தினேஷ் வேலை அறிக்கையை வாசித்தார்.எல்லாபுரம் ஒன்றிய பொருளாளர் ஆர்.காந்திமதி நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.பி.செல்வம், என்.பொன்னரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வி.சி.ராஜேந்திரன்,சி.மலர்கொடி,எஸ்.வனிதா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டு நிகழ்ச்சிகள் குறித்து சிறப்புரையாற்றி பேசினர்.
மாவட்டச் செயலாளர் ஆர்.சுலோச்சனா மாநாட்டு நிறைவு உரையை ஆற்றினார். இம்மாநாட்டில் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியான காலமுறை ஊதியம் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதற்கு இணையான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,750 ஐ அகவிலை படியுடன் வழங்க வேண்டும்.10 வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறை காலி பணியிடங்களில் 50 சதவிகிதம் முன்னுரிமை அளித்து பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.
ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும். முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றிட வேண்டும். காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்குவதை கைவிட்டு சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநாட்டின் முடிவில் மாவட்ட பிரதிநிதி கே.பிருந்தா நன்றி கூறினார்.