பேருந்துகள் இயக்க வேண்டும்: கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
பல்நோக்கு கட்டிடங்கள் கட்டுவது உள்பட 9 பணிகளுக்கு ஒன்றிய பொது நிதி ரூ.31.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது
கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி-திருவள்ளூர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு கூட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஒன்றிய பெருந்தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய துணைப்பெருந்தலைவர் மாலதிகுணசேகர்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பச்சையப்பன்,ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்தகூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்லவாடா ரோஜா ரமேஷ்,முக்கரம்பக்கம் நாகராஜ், மாதர்பாக்கம் சிட்டிபாபு, சுண்ணாம்புகுளம் உஷாரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கும்மிடிப்பூண்டியில் இருந்து மாவட்ட தலைநகரான திருவள்ளூருக்கு செல்ல இயக்கப்படும் பேருந்துகள் தடம் எண் 172,173,160எ ஆகிய பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவது இல்லை.
எனவே, இப்பேருந்துகளை குறித்த நேரத்தில் இயக்க போக்குவரத்துதுறை அதிகாரிகளை அறிவுறுத்துவது என்றும், கும்மிடிப்பூண்டியில் இருந்து திருவள்ளூருக்கு மாநகர போக்குவரத்து கழக பேருந்தை ஒன்றை இயக்க வலியுறுத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மாநெல்லூர், முக்கரம்பாக்கம், மங்காவரம், செதில்பாக்கம், தோக்கமூர், ஈகுவார்பாளையம், பெரிய ஓபுளாபுரம் ஆகிய ஏழு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்னையை போக்குவது, பெரிய ஓபுளாபுரம், பெத்திக்குப்பம் ஆகிய இரண்டு இடங்களில் பல்நோக்கு கட்டிடங்கள் கட்டுவது என்றும் இந்த 9 பணிகளுக்கும் மொத்தம் ரூ.31.20 லட்சம் ஒன்றிய பொது நிதியில் பணிகள் மேற்கொள்ளுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.