கும்மிடிப்பூண்டி அருகே கால்வாய் அமைக்கும் பணி.. கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் ஆய்வு...
கும்மிடிப்பூண்டி அருகே உபரி நீர் செல்லும் கால்வாய் அமைக்கும் பணிகள் மற்றும் சாலை பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய இரு ஏரிகளை இணைத்து, 'கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்' என்ற புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கியது. சுமார் 1,485.16 ஏக்கர் நிலத்தில், 380 கோடி ரூபாய் மதிப்பிலான கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம், முடிவடைந்து மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவால் காணொலி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இதனை அடுத்து கரடிபுத்தூர் ஏரியில் இருந்து நீர்த்தேக்கத்தில் நீர் அதிகரிக்கும் போது உபரி நீர் வெளியே செல்ல இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வடப்பு பெரிய ஏரிக்கு உபரிநீர் செல்வதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த உபரி நீர் செல்லும் கால்வாய் அருகாமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த கால்வாயின் ஒருபுறம் மட்டுமே கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. மறுபகுதியில் சுவர் இல்லாததால் வெளியேறும் உபரி நீரானது விலை நிலங்களுக்குள் சென்று பயிர்கள் சேதமடைகின்றன. இதனால், கால்வாய் பணிகள் சில இடங்களில் தடைபட்டு நிற்கிறது. அந்த கால்வாய் பணிகளை சீரமைத்து உபரி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று கண்ணன்கோட்டை தேர்வாய் கிராம மக்கள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜனிடம் கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கால்வாய் பணிகளையும் மதகு பணிகளையும் ஆங்காங்கு பாதிக்கப்பட்டுள்ள சாலை பணிகளையும் கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் . ஆய்வின்போது, திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, மணிபாலன்,
தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் , இளநிலைப் பொறியாளர் பத்மநாபன். தேர்வாய் ஊராட்சி மன்ற தலைவர் முனிவேல், ஒன்றிய கவுன்சிலர் கலா, உமாபதி, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
ஆய்வு குறித்து கோவிந்தராஜன் எம்எல்ஏ கூறியதாவது:
கால்வாய் அமைக்கும் பணிகள் குறித்து தமிழக முதல்வரிடமும், துறை சார்ந்த அமைச்சர்களையும் நேரில் சந்தித்து எடுத்துக் கூறி விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.