கும்மிடிப்பூண்டி தாசில்தாரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்ட 8 பேர் மீது வழக்கு.
சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து வட்டாட்சியரை அவதூறாக பேசி வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் கடந்த 5ஆம் தேதி வட்டாட்சியராக பிரீத்தி பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இவரிடம் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் உள்ள அரசு நிலங்களின் விவரங்களை வழங்குமாறு போலி வழக்கறிஞர் என கூறப்படும் காயலார்மேடு கிராமத்தை சேர்ந்த நந்திவர்மன் என்பவர் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களை அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அலுவலகத்திற்கு சென்ற ஆந்திராவில் எல் எல் பி படித்து வரும் நந்திவர்மன் தன்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்றும் அவருடன் புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த்ராஜ் ஆகியோர் அலுவலக உதவியாளரை அவதூறாக பேசி அத்துமீறி உள்ளே நுழைந்து வட்டாட்சியரை கோபப்படும் வகையில் பேசி வட்டாட்சியருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக கூறி சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட எம் டி சி தொழிற்சாலையின் குறைபாடுகள் குறித்து வட்டாட்சியரிடம் தகாத முறையில் பேசிய பெரிய ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா மற்றும் அவருடன் வந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து எளாவூர் பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அருள் என்பவர் முன்னறிவிப்பின்றி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ததால் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பெண் வட்டாட்சியர் என்று பாராமல் அவதூறாக பேசியதுடன் அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.