லஞ்சம் கொடுக்க பட்டை நாமம் போட்டு முதியவர் பிச்சை எடுத்த சம்பவத்தால் பரபரப்பு
கடந்த 9 மாத காலமாக நிலத்தை அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அலைகழித்ததாக கூறப்படுகிறது;
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பட்டை நாமம் போட்டுக் கொண்டு அரை நிர்வாணத்துடன் முதியவர் பிச்சை எடுத்த சம்பவத்தால் பரபரப்பு.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி( 66 ) விவசாய இவருக்கு 6 சென்ட் வீட்டு நிலம் உள்ளது. இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உள்ள நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் நிலத்தை அளவீடு செய்ய கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 9 மாத காலமாக நிலத்தை அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அலைகழித்ததாக கூறப்படுகிறது தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலில் முதியவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஆனாலும் நிலத்தை அளவீடு செய்வதில் தாமதம் நிலவி வருவதாக தெரிகிறது. மேலும் நிலத்தை அளக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கெட்டதாகவும் கூறப்படுகிறது .
இந்த நிலையில் லஞ்சம் வழங்க பணமில்லாததால் முதியவர் இன்று கும்மிடிப்பூண்டி பேருந்து நிறுத்தத்தில் உள்ள அண்ணாசிலை அருகே சட்டியுடன் நிலத்தை அளக்க பிச்சை வழங்குமாறு பதாகை ஏந்தி பொதுமக்களிடம் பிச்சை எடுத்தார். இதனால் கும்மிடிப்பூண்டி பேருந்து நிறுத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் முதியவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அலுவலக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முதியவர் பட்டை நாமம் போட்டு கொண்டு பிச்சை எடுத்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.