கோவிலுக்கு வந்த இடத்தில் இரும்பு கேட் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

பெரிய பாளையம் அருகே பவானி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் இரும்பு கேட் விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.

Update: 2023-01-09 07:39 GMT

உயிரிழந்த நித்திஷ்.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட வந்து குடும்பத்துடன் வாடகை விடுதியில் தங்கி இருந்தபோது விடுதியின் இரும்பு கதவு  விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தான்.

சென்னை அயனாவரம் பெரியார் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ். இவருக்கு திருமணம் ஆகி துர்கா என்கிற மனைவி சிலம்பரசன் (13) நித்திஷ் (11) என்கிற இரண்டு மகன்களும் உண்டு. நித்திஷ் அயனாவரம் பகுதியில் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் ரமேஷ் தனது குடும்பம் உறவினர்களோடு நேர்த்திக் கடனை செலுத்த திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு வந்து பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான விடுதியில் அறை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். நேற்று காலையில் பவானி அம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்தி கடனை செலுத்தி சாமி கும்பிட்டுவிட்டு தான் தங்கி இருந்த  அறைக்கு வந்தார். அவருடன் குடும்பத்தினரும் வந்தனர்.

இந்நிலையில்  விடுதியின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள ராட்சத இரும்பு கதவு அருகே சிறுவன் நித்திஷ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென இரும்பு கதவு கழன்று சிறுவன் மீது விழுந்தது. இதில்  சிறுவன் நித்திஷின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

ஆனாலும் நித்திஷின்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை மீட்டு பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் நித்திஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு நித்திஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களது அழுகை சத்தம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த பெரியபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர்கள் கண் எதிரிலேயே   சிறுவன் மீது இரும்பு கதவு விழுந்து அவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் சுற்றுப்புறங்களில் பல இடங்களில் முறையான அனுமதியின்றி பாதுகாப்பு இல்லாத வகையில் விடுதிகளை கட்டி வாடகைக்கு விட்டு வருவதால் இது போன்று உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது என்றும் இதுபோன்று தனியார் விடுதிகளை அதிகாரிகள் ஆய்வு நடத்தி பாதுகாப்பு இல்லாத விடுதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News