கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி

கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.

Update: 2022-07-19 02:54 GMT

உயிரிழந்த ஹரீஷ்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி கரும்புகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் (26). ஓட்டுனரான இவர் சிவகாசியை சேர்ந்த செல்வி (22) என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னாள் காதல் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் ஹரிஷ் - செல்வி தம்பதியருக்கு ஜனதா என்ற 3 வயது மகள் உள்ளார். ஓட்டுனரான ஹரிஷ் வேலை கிடைக்காத காரணத்தால் சில நேரங்களில் கிடைக்கும் வேலையை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஸ்வான் என்டர்பிரைசஸ் எனும் தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது தொழிற்சாலைக்கு வெளியே உள்ள கழிவு நீர் தொட்டியின் இணைப்பை முதலில் சுத்தம் செய்யுமாறு தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கழிவு நீர் தொட்டியின் இணைப்பை சுத்தம் செய்து கொண்டிருந்த ஹரிஷ் திடீரென மயக்கம் அடைந்தார். அவரை மீட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோட்டக்கரை உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முறையாக காவல் துறைக்கு தகவல் அளித்த தொழிற்சாலை நிர்வாகத்தினர், ஹரிஷின் உடலை பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். தகவல் அறிந்த சிப்காட் காவல் துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News