பெரியபாளையம் உரக்கடையின் மேற்கூரை உடைத்து ரூ. 2 லட்சம் கொள்ளை
பெரியபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான உரக்கடையின் மேற்கூரையை உடைத்து 2லட்ச ரூபாய் திருடபட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சேர்ந்தவர் தேன்கனி (38). இவர் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வெங்கடேஸ்வரா திரையரங்கு அருகே உரக்கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று தமது கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை வழக்கம் போல 7 மணி அளவில் கடையை திறந்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையில் இருந்த பொருட்கள் சிதறிய நிலையில் கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த 2லட்ச ரூபாய் விற்பனை பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடந்த வாரம் இந்த உர கடையின் பின்புறம் உள்ள விவசாயி வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் தங்க நகை 5 கிலோ வெள்ளி 30 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கூறுகையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே தனிப்படை அமைத்து இதுபோன்ற தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.