கணவன்- மனைவி தகராறில் இளம்பெண் தீக்குளித்து பலி
ஆவடி அருகே, கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் அணைக்கட்டுசேரி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் ஜோதிடம் பார்ப்பவர். இவரது மனைவி தேவி (23). தம்பதியருக்கு கடந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி ஒரு வருடமே ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை; இதனால், இருவரிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு.
சம்பவத்தன்று, கார்த்திக் வீட்டிற்கு வெளியே இருந்துள்ளார். அப்போது, தேவி வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டார். இதில், உடல் கருகி உயிருக்கு போராடினார். அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுமதித்தார்.
அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தேவி பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்பேரில், பட்டாபிராம் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவிக்கு திருமணமாகி ஓராண்டு ஆவதால் திருவள்ளூர் ஆர்டிஓ விசாரிக்கிறார். திருமணமாகி ஓராண்டு ஆகாமலே பெண் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.