திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
ஆவடியில் திமுக கூட்டணி காங்கிரஸ் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஒன்றிய பாஜக அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை திமுக தொண்டர்கள் தூங்க மாட்டார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
பிரதமருக்கு புதிய 29 பைசா என புதிய பெயர் சூட்டிய அமைச்சர் உதயநிதி.
இனிமேல் பிரதமர் பெயரை கூறும்போது 29 பைசா என்றே கூற வேண்டும் என மக்களிடையே ஒரு வாக்குறுதியை கேட்டார் உதயநிதி ஸ்டாலின்.
பரப்புரை முடிந்து கிளம்பிய போது பஞ்சரான டயர்- மாற்று வாகனத்தில் சென்ற உதயநிதி.
திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆவடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.. 1000த்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அவர் பேசியதாவது.
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அமைச்சர் உதயநிதி திறந்த வேனில் நின்றபடி பரப்புரையில் ஈடுபட்டார். பொதுமக்கள் அனைவரும் நலமாக உள்ளீர்களா என கேட்டு, நான் நலமாக இருக்குறேனா என கேட்க மாட்டீர்களா என கேட்டு பிரச்சாரத்தை துவக்கினார்.
முதலில் காலதாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும், வழி நெடுகிலும் பொதுமக்கள் வரவேற்பு அளித்து திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி எனவும், நரேந்திர மோடி வீட்டிற்கு செல்வது உறுதி என வாழ்த்தி அனுப்பியதால் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதாக கூறினார்.
உச்சி வெயிலை விட உக்கிரமாக இருக்கும் ஒன்றிய மோடி அரசை விரட்ட காத்திருக்கிறீர்கள், அதற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். கடந்த தேர்தலில் 3.57லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் உறுப்பினர் வெற்றி பெற்றதாகவும், இந்த முறை அந்த வெற்றி போதாது எனவும், அப்போது ஒன்றாக இருந்த எதிரிகள் தற்போது தனி தனியாக வருவதால் இந்த தேர்தலில் குறைந்தது 6லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
குறைந்தது 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் மாதம் 2 நாட்கள் இந்த தொகுதிக்கு வந்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். நீங்கள் அளிக்கும் ஓட்டு மோடி தலையில் வைக்கும் கொட்டு எனவும் தெரிவித்தார்.
சசிகாந்த் செந்திலுக்கு இது முதல் தேர்தல் அல்ல, ஏற்கனவே கர்நாடகாவில் பாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் சசிகாந்த் செந்தில் எனவும்,இப்படி ஒரு நல்ல வேட்பாளரை கொடுத்தற்கு சோனியா, ராகுலுக்கும், தலைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.
நீண்ட காலம் நிலுவையில் இருந்த நீதிமன்ற பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வருவதாக கூறினார். ஒவ்வொரு தேர்தலிலும் கலைஞர் தேர்தல் வாக்குறுதிகளை கூறி சொன்னதை செய்வோம் , செய்வதை சொல்வோம் என்பது போல தற்போது முதல்வரும் சொன்னதை தான் செய்து வருவதாக கூறினார்.
2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதும் கொரோனா 2ஆம் அலையிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை எனவும் அப்போதைய சூழலிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி முதல் கையெழுத்தாக கொடுக்கப்பட்டது எனவும், 3ஆண்டுகளில் 460கோடி முறையை பயணம் செய்துள்ளனர் எனவும் இந்த திட்டத்தை அருகில் உள்ள மாநிலங்கள் திட்டங்களில் சேர்ப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
திட்டத்தை எவ்வளவு அதிக மக்கள் பயன்படுத்துகிறார்களோ அதுதான் திட்டத்தின் வெற்றி எனவும், பிங்க் கலர் பஸ் என அழைக்காமல் ஸ்டாலின் பஸ் என அழைப்பதே வெற்றி என்றார்.
சொந்த காலில் பெண்கள் நிற்க வேண்டும் என அறிமுகப்படுத்தப்பட்டது தான் புதுமைப்பெண் திட்டம் எனவும், 3 வருடத்தில் 3லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர் எனவும்,இந்தாண்டு முதல் ஆண்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
குழந்தையை பார்த்து கொண்டு, உணவு கொடுத்து, கல்வியை கொடுக்க திராவிட மாடல் அரசு உள்ளது என பொதுமக்கள் வாழ்த்துகிறார்கள் எனவும், பக்கத்து மாநிலங்கள் இங்கு வந்து இதனை பார்த்து செயல்படுத்தி உள்ளன எனவும், காலை உணவுத்திட்டத்தில் 18 லட்சம் குழந்தைகள் நாள்தோறும் பயனடைந்து வருவதாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் செயல்படுத்தவே முடியாது என கூறிய நிலையில் கடும் நிதி நெருக்கடியிலும், தற்போது 1கோடியே 16லட்சம் பெண்கள் மாதந்தோறும் 1000ரூபாய் பெற்று பயனடைந்து வருவதாகவும், சிறிய சிறிய குறைகள் உள்ள நிலையில் தேர்தல் முடிந்த பிறகு குறைகள் அனைத்தும் களையப்பட்டு 1 கோடியே 60 லட்சம் மகளிருக்கும் மகளிர் உரிமைத்திட்டம் கிடைக்கும் என்றார்.
நாங்கள் 3 ஆண்டு சாதனைகளை கூறி ஓட்டு கேட்டு வருகிறோம் எனவும், இனிமேல் பிரதமர் பெயரை கூறும்போது 29 பைசா என்றே கூற வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்
தூத்துக்குடி, நெல்லை 10 நாட்கள் வெள்ளத்தில் மூழ்கி இருந்த போது நான் 10நாட்கள் அங்கேயே தங்கி இருந்ததாகவும், நான் உட்பட கூட்டணி கட்சியினர் மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும், சென்னை 3 நாட்கள் வெள்ளத்தில் மூழ்கிய போதும் களத்தில் இருந்தோம் எனவும், 29 பைசா வந்தாரா என கேள்வி எழுப்பினார். நீட் தேர்வால் 22 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அரியலூர் அனிதா தொடங்கி அனைத்து குழந்தைகளின் குடும்பத்தையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி ஒரே ஒரு செங்கல் மட்டுமே வைத்தீர்களே எனவும், அந்த செங்கல்லை கையில் காட்டி கேள்வி எழுப்பினார். ஒரே கல்லை காட்டி மருத்துவமனை என கூறி வருகின்றனர் எனவும், அதற்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை எனவும், தமிழ்நாட்டிற்கு பிறகு அறிவித்த பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சிஏஜி அறிக்கையில் 7.5 லட்சம் கோடி ஊழல் என கூறப்பட்டுள்ளது எனவும் இந்த ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் உண்டா என்றார். இந்த பிராச்சார கூட்டத்தையே வேட்பாளர் அறிமுகக் கூட்டமாக எடுத்து கொள்ள வேண்டும் எனவும் சசிகாந்த் செந்திலை 6லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் தற்போது 7வது நாளாக 11தொகுதியில் பிரச்சாரம் செய்துள்ளதாகவும், இந்த 11தொகுதியிலும் நிச்சியம் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் கலைஞர் பிறந்தநாள் பரிசாக 40க்கு 40 தொகுதி ஜெயித்து தேர்தல் வெற்றியை கொடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டு கொண்டார்.
இறுதியாக பரப்புரை முடித்து கிளம்பும்போது பரப்புரை வாகனம் டயர் பஞ்சரானது உடனடியாக டயரை மாற்றி வாகனத்தை கொண்டு சென்றனர்.இதற்கு இடையே உதயநிதி வேறு காரில் சென்னைக்கு கிளம்பி சென்றார்.
இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆவடி நாசர், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கிரி ராஜன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரமேஷ்,ஜெயபால், காயத்ரி ஸ்ரீதரன்,நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்தமிழ் செல்வன், ஒன்றிய செயலாளர் கமலேஷ், நகரச் செயலாளர் திருமலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அனைத்து அணைகளை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.