ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்த நபர் கைது
திருவள்ளூரில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமலைவாசன் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தங்கராஜ்(38), இவர் பி.இ படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தபோது. ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும் தனக்கு வேலை வாங்கி தருவதாக சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்(41) தங்கராஜிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பி அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.13 லட்சம் தங்கராஜ் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தார். மேலும் இதேபோல் சென்னையை சேர்ந்த ஸ்ரீநாத், கார்த்திக்குமார் மற்றும் திருமல்லேஷ் ஆகிய பலரிடமும் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.59 லட்சத்து 37 ஆயிரம் பெற்றுக்கொண்டு இதுநாள்வரை வேலை வாங்கி தராமல் சுரேஷ் ஏமாற்றி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து நண்பர்களும் சுரேஷ் மீது திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் சுரேஷை தேடி வந்த நிலையில் அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக அறிந்த போலீசார் சுரேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.