பள்ளத்தில் தவறி விழுந்த புள்ளிமான் உயிரிழப்பு; கழுத்தில் சுருக்கிட்டு தூக்கிய ‘புத்திசாலி’ வனத்துறையினர்

ஆவடி அருகே வழிதவறி ஊருக்குள் புகுந்த புள்ளி மான் பள்ளத்தில் விழுந்தது. புள்ளிமானை வனத்துறையினர் மீட்கும் போது, கழுத்தில் சுருக்கிட்டு தூக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2024-05-30 11:45 GMT

பள்ளத்தில் விழுந்த புள்ளிமான் உயிரிழந்தது. 

ஆவடி அருகே ஊருக்குள் புகுந்த புள்ளிமான், வனத்துறையினர் கவனக்குறைவால் பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக  உயிரிழந்தது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே நேற்று இரவில் ஊருக்குள் புகுந்த புள்ளி மானை, மாடு துரத்தியதால் தப்பி ஓடி கட்டிட அடித்தள பள்ளத்திற்குள் சிக்கியது.

இதனை அதிகாலை கண்ட ஊர் பொது மக்கள் உடனே முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினருக்கும் வெங்கல் அடுத்த சீத்தஞ்சேரி வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பள்ளத்தில் சிக்கிய மானை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது மானை மீட்பதற்காக நைலான் கயிற்றில் காலில் சுருக்கு போடுவதற்கு பதிலாக கழுத்தில் போட்டு இறுக்கியுள்ளனர். இதில் மான் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.

இதனைக் காண வந்த பொது மக்கள் ஆத்திரமடைந்த நிலையில். உயிரிழந்த மானின் உடலை வனத்துறையினர் எடுத்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் வனத்துறையில் பணியாற்றுவோருக்கு கால்நடைகளை மீட்பதற்காக வழிமுறைகள் தெரியாமல் பணியாற்றி வருவதாகவும், மீட்கும் பணியில் ஈடுபட்ட போது மானுக்கு காலில் சுருக்கு போட்டு பிடிக்க வேண்டிய மாறாக கழுத்துப் பகுதியில் சுருக்கு போட்டு இழுத்ததால் மான் பரிதாபமாக இறந்து போனதாகவும், வனத்துறையினர் அஜாக்கிரதை காரணத்தினால் மான் உயிரிழந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக பள்ளத்தில் சிக்கிய மானுக்கு இலை தழைகளை கொடுத்து பத்திரமாக பாதுகாத்து வந்ததாகவும், வனத்துறையினர் மீட்பதாக கூறி வனத்துறையினரின் கவனகுறைவால் மான் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News