ஆவடி அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஆவடி அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-03-13 09:08 GMT

கொலை செய்யப்பட்ட யோகேஸ்வரன் மற்றும் கைது செய்யப்பட்ட ஷாம் விக்டர் தாஸ்.

ஆவடி அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 9பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பொத்தூர் வள்ளி வேலன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் பிரபல ரவுடி யோகேஸ்வரன்(32). இவர் வீடுகளுக்கு வர்ணம் பூசும் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ளனர். யோகேஸ்வரன் இதற்கு முன் பிரபல ரவுடியாக இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது. இதனை அடுத்து கடந்த 5 ஆம் தேதியன்று யோகேஸ்வரன் வழக்கம் போல் வர்ணம் பூசும் பணிக்குச் சென்று மாலை வீடு திரும்பி அன்று இரவு குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளார்.

இவர் தூங்கிக் கொண்டிருந்தபோது ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த யோகேஸ்வரனை அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை கொண்டு தலை, கை, கால், முகம் பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.அருகாமையில் தூங்கிக் கொண்டிருந்த யோகேஸ்வரன் மனைவி இந்த சம்பவத்தை கண்டு அலறி அடித்து கூச்சலிட்டார். மேலும் இந்த சத்தத்தை கேட்ட அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் ஓடி வரவே மர்ம நபர்கள் அவர்கள் வந்த வாகனங்களில் ஏறி தப்பி சென்றனர். இதில் காயமடைந்த யோகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் இறந்து கிடந்த யோகேஸ்வரன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தியதில், இறந்து போன யோகேஸ்வரன் முன்பு பிரபல ரவுடியாக வலம் வந்த போது மீன் வியாபாரி சுறாவுக்கும் அவருக்கும் தொழில் ரீதியாக போட்டி இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக மீன் வியாபாரி சுறாவை யோகேஸ்வரன் மற்றும் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து 2016 ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இந்த முன் விரோத காரணத்தினால் தற்போது யோகேஸ்வரனை கொலை செய்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் சந்திப்பராய் ரத்தேர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கொலையில் தொடர்புள்ள குற்றவாளிகள் 6 பேர் சென்னை ஐகோர்ட்டில் சரணடைய சென்றபோது சென்னை பாடி ரவுண்டானா பகுதியில் அவர்களை சுற்றி வளைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணை செய்ததில் மீன் வியாபாரி சுறாவை கொலை செய்த முன்விரோதம் காரணத்திற்காக மீன் வியாபாரி சுறா மகன் ரமேஷ் தன் தந்தையை கொலை செய்த யோகேஸ்வரனை தீர்த்துகட்ட திட்டமிட்டு அவரது கூட்டாளிகளான சந்துரு, மணிமாறன்,செல்வகுமார், மஞ்சுநாதன், முத்து ஆகியோர் யோகேஸ்வரனை வீடு புகுந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையொட்டி அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தாம்பரத்தைச்சேர்ந்த ஷாம் விக்டர் தாஸ் (19) என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News