டீ மாஸ்டர் அடித்து கொலை நேபாள வாலிபர் கைது
அம்பத்தூரில் குடிபோதையில் தகராறு- டீமாஸ்டர் கரண்டியால் அடித்துக்கொலை- செய்யப்பட்டார். இது தொடர்பாக நேபாள வாலிபரை போலீசார் கைது- செய்தனர்;
அம்பத்தூர் வி.ஜி.என் நகர், மகாத்மா காந்தி சாலையில் தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. இதனை சத்யேந்திரகுமார் என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் 5க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த 37வயதுடைய வாலிபர் டீ மாஸ்டராக பணிக்கு சேர்ந்துள்ளார். ஏற்கனவே அங்கு நேபாளத்தைச் சேர்ந்த வினோத் (33) சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், வினோத்திற்கும், டீ மாஸ்டருக்கும் இடையே ஈகோ பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ஓட்டலில் முதல் மாடியில் வேலை முடிந்தவுடன் வினோத் உட்பட அனைவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது, போதையில் வினோத்திற்கும், டீ மாஸ்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் மற்ற ஊழியர்கள் சமாதானம் செய்து உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை 11மணி அளவில் மீண்டும் வினோத்திற்க்கும், டீ மாஸ்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத் வடை சுடும் கரண்டி எடுத்து, டீ மாஸ்டரை தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே டீ மாஸ்டர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த ஓட்டல் உரிமையாளர் சத்யேந்திர குமார் உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து வந்தார்.
பின்னர், அவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலையாளி வினோத்தை பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்தனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போலீசார் கொலை செய்த வழக்கு தொடர்பாக சமையல் மாஸ்டர் வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈகோ பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில் டீ மாஸ்டரை கொலை செய்த சம்பவம் அம்பத்தூரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.