உணவு கடை பூட்டை உடைத்து பணம் செல் போன் கொள்ளை!
ஆவடி அருகே கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன் கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸ் தேடி வருகிறது.;
ஆவடி அருகே பூட்டி இருந்த உணவு கடையை உடைத்து ரூபாய் 25 ஆயிரம், செல்போன் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே அண்ணனூர் ரயில் நிலையம் எதிரே மணிகண்டன் என்பவர் உணவு கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் வழக்கம்போல் மணிகண்டன் சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் கடை நடத்திவிட்டு பின்னர் வியாபாரம் செய்த பணத்தை கடையின் கல்லாவில் வைத்து கடையை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்று உள்ளார்.
காலை கடை திறக்க வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூபாய் 25,000 ரொக்க பணம், விலை உயர்ந்த செல் போன் ஒன்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து மணிகண்டன் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.