சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை ஆளுநர் ரவி செய்துள்ளார்
சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அதர்ம போக்குடன் செயல்படுகிறார்
ஆன்லைன் ரம்மி அவசர சட்ட மசோதா விவகாரத்தில் சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை ஆளுநர் ரவி செய்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகர அதிமுக அவை தலைவர் தன்ராஜ் என்பவர் அண்மையில் மறைந்ததை அடுத்து அவரது 16ஆம் நாள் படத்திறப்பு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பி வி ரமணா ,முன்னாள் எம்எல்ஏ அலெக்ஸாண்டர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தன்ராஜின் திருவுருவப்படத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர் சந்தித்தபோது கூறுகையில் ஆளுநரின் முடிவை விமர்சிப்பது முறையற்றது சட்ட ரீதியானதும் அல்ல.காலம் தாழ்த்தாமல் ஆளுநர் இந்த முடிவை எடுத்திருந்தால் மற்றவர்கள் குற்றம் சாட்டும் நிலை ஏற்பட்டிருக்காது.
கூட்டுறவு தேர்தல்களை மீண்டும் நடத்த வேண்டும் என்பதைப் போல, முறையற்ற சட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைப்பது தவறில்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க இவ்வளவு தாமதம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அதர்ம போக்குடன் செயல்படுகிறார்.உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவு எடுக்கும் போது, சட்டமன்றத்தில் அதற்கு மாறுபட்டு முடிவை சபாநாயகர் எடுப்பது தவறு. வெகு விரைவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர். பி. உதயகுமார் அமர்ந்தே ஆகவேண்டும். மீண்டும் நீதிமன்றம் சென்று முடிவை எடுக்கும் நிலைக்கு அதிமுகவை தள்ள வேண்டாம். சபாநாயகர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார் மாஃபா பாண்டியராஜன்.