திருவேற்காட்டில் மாஸ் கிளினிங்: 10 டன் குப்பைகளை ஒரேநாளில் அகற்றம்
ஆவடி அருகே, திருவேற்காட்டில் 10 டன் குப்பைகள் ஒரேநாளில் அகற்றப்பட்டது;
சென்னை புறநகர் பகுதியான ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக திருவேற்காடு நகராட்சி சுகாதார துறை ஆய்வாளர் ஆல்பர்ட் தலைமையில் மாஸ் கிளீனிங் என்ற பெயரில் ஒட்டு மொத்த துப்புரவு பணி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. திருவேற்காடு நகராட்சி உட்பட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து இந்த பணி நடைபெற்று வருகின்றது.
முன்னதாக திருவேற்காடு 4-வது வார்டு கோலடி பகுதியில், இந்த திட்டத்தை நகர்மன்ற தலைவர் என் ஈ கே.மூர்த்தி தொடங்கி வைத்தார். இதனை அடுத்து இந்தப் பகுதியில் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் 100.க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், ஜேசிபி எந்திரம் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஒரேநாளில் ஒட்டு மொத்த குப்பையையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது துப்புரவு தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடன் இணைந்து நகர்மன்ற தலைவர் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்..
இது குறித்து நகர்மன்ற தலைவர் என்.ஈ.கே.மூர்த்தி கூறியதாவது: இந்த நகராட்சிக்கு உட்பட்ட 30 இடங்களில் அதிக அளவில் குப்பை உள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் உள்ள குப்பைகள் அனைத்தும் ஒரு வார காலத்தில் முற்றிலும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பை அகற்றப்படும் பகுதிகள் முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன், மீண்டும் குப்பைகள் சேராதவாறு கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்படி திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 30 முதல் 40 டன் வரை திடக்கழிவுகள் அகற்றப்பட உள்ளன. நகராட்சி பகுதிக்குள் வசிக்கும் மக்கள் குப்பைகள் தேங்காதவாறு நகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து குப்பையில்லா திருவேற்காடு என்ற நிலையை உருவாக்கி வேண்டும் என்று அவர் தெரிவித்தார்., இதில் நகரமன்ற உறுப்பினர் சுதாகர் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.