ஆவடியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிப்பு
ஆவடி பகுதியில் போலீசார் சோதனையில் பிடிபட்ட 195 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
ஆவடியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 195 கிலோ கஞ்சா அழிக்கபட்டது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்கும் வகையில் காவல் துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வெளி மாநிலங்களில் ரயில், மற்றும் பேருந்துகள் மூலம் போதைப் பொருட்கள் வருவதை கண்காணித்து அவை தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, கடத்தல்காரர்களை பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு சோதனையில், 61 வழக்குகளின் கீழ் 195 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் ஆவடி துணை ஆணையர் ஐமன் ஜமால் மற்றும் காவலர்கள் முன்னிலையில் செங்கல்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வைத்து கஞ்சா,குட்கா மூட்டைகள் இயந்திரங்களில் போடப்பட்டு எரிக்கப்பட்டது.