தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக்கோரி கல்லூரி மாணவிகள் போராட்டம்

ஆவடி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றக்கோரி கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-17 07:39 GMT
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக மாணவிகள் திரண்டு நின்றனர்.

ஆவடியில் கல்லூரி வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசியது. நடவடிக்கை எடுக்காத ஆவடி மாநகராட்சியை கண்டித்து மாணவிகள் நடத்திய   போராட்டத்தால்  பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் இந்த மழைக்கு தப்பவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் பெண்கள் கல்லூரி  இயங்கி வருகிறது. இந்த  தனியார் பெண்கள் கல்லூரியில் சுமார் 2,500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு அருகில்  உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது கல்லூரிக்கு அருகாமையில் உள்ள காலி மனையில் வந்து தேங்கி நின்று மழை நீருடன் சேர்ந்து அங்கிருந்து கல்லூரியின் உள்ளே சுவர்களில் கசிந்து விளையாட்டு திடல் மற்றும் கல்லூரியின் சுற்றி சூழ்ந்துள்ளது. இந்த கழிவுநீரானது கல்லூரி வளாகத்திற்குள் பல நாட்களாக தேங்கி நிற்பதால்  அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு மாணவிகள் கல்லூரியில் அமர்ந்து படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடும் ஏற்படுகிறது.

இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து  கல்லூரி சார்பில் ஆவடி மாநகராட்சிக்கு மனு அளித்தும். இன்று வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவிகள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து வீசிய துர்நாற்றத்தால் சில மாணவிகள் வகுப்பறையிலே மயங்கி விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் மதியம் மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்து உள்ளது.

பின்னர் மறுநாள் கல்லூரிக்கு வந்த கல்லூரி மாணவிகள் சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஒன்று கூடி கழிவுநீர் பிரச்சினை மீது நடவடிக்கை எடுக்காத ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து. மாணவர்களிடையே சமரசம் பேச்சுவார்த்தை நடத்தி வெகு விரைவில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மாணவிகள் கலைந்து வகுப்புகளுக்கு சென்றனர். இப்போது நடந்த  போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி அருகே மழை நீரால் கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்டு இருப்பதால் இதில் கல்வி துறை அதிகாரிகள்உடனடி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என  மாணவிகளின் பெற்றோர் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News