ஆவடி: தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
ஆவடி அருகே தனியார் உணவகத்தில் பணி புரிந்து வந்த வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
சென்னை ஆவடி பகுதியில் வசிப்பவர் விஜய் இவர் காமராஜர் நகரில் விரைவு உணவகம் நடத்தி வருகிறார். அந்த உணவகத்தில் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஹர்சன் மாலிக் என்பவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு கடையில் உள்ள கிரில் சிக்கன் இயந்திரத்தில் சிக்கன் வைத்து சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென இயந்திரத்திலிருந்து மின்சாரம் ஹர்சன் மாலிக்கின் மீது பாய்ந்துள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். மயக்க நிலையில் கிடந்த அவரை ஓட்டல் உரிமையாளர் மற்றும் அங்குள்ள ஊழியர்கள் உடனடியாக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஹர்சன் மாலிக்கின் தந்தை நிஜாம் மாலிக் ஆவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கொரோனா பரவல் காலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின்போது உணவகத்தில் வடமாநிலத்தவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.