ஆவடி: பெண்ணிடம் தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்ட போலீசுக்கு வெட்டு
ஆவடி அருகே பெண்ணிடம் தகராறு செய்த நபர்களை தட்டிக்கேட்ட துணை ஆய்வாளர் கத்தியால் வெட்டப்பட்டார்.;
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன் (52). பூந்தமல்லி காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர். இவர் திருநின்றவூர் பிரகாஷ் நகரில் உள்ள தெரிந்த பெண்மணி வீட்டுக்கு சென்றபோது, அங்கு திடீரென வந்த 2 நபர்கள், அந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதை பார்த்த துணை ஆய்வாளர் தாமோதரன், அவர்களை தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் தாமோதரனின் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயமடைந்த தாமோதரன், ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து. படுகாயமடைந்த துணை ஆய்வாளர் தாமோதரனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் , கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், துணைக் ஆய்வாளர் தாமோதரனை கத்தியால் வெட்டி தப்பிச்சென்ற வில்லிவாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த விஜய் (25), ஆவடி அடுத்த அன்னம்பேடு, பெருமாள் கோயில் தெருவை சார்ந்த ரவுடி இளவரசன் (34) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார், விஜய்யை கைது செய்தனர். தலைமறைவான உள்ள இளவரசனை போலீசார் தேடி வருகின்றன.