ஆவடி அருகே தாயின் புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு
ஆவடி அருகே தாயின் புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.;
உயிரிழந்த சிறுவன்.
ஆவடி அருகே ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் புடவை இறுக்கியதால் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் மூர்த்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கண்ணப்பன். இவருக்கு 5வயது ஜஸ்வந்த் மற்றும் இரண்டு வயதில் மற்றொரு மகன் ஆகிய இரண்டு மகன்கள் உண்டு. இந்த நிலையில் ஜஸ்வந்த் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.
ஜஸ்வந்த் வீட்டில் தனது தாயின் புடவையில் ஊஞ்சல் கட்டி இருந்த நிலையில் அதில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவன் கயிற்றில் புடவை இறுக்கமாக சிக்கி மூச்சு திணறி ஊஞ்சலில் மயங்கிய நிலையில் இருந்தான். இதனைக் கண்ட பெற்றோர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையாக கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் மூச்சு திணறி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் தாய் புடவையில் சிக்கி மூச்சு திணறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் ஊஞ்சல் ஆடுவதில் விருப்பம் உள்ளவர்கள். இது குழந்தைகளின் பொதுவான குணம். ஆனால் அதில் பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை என்றால் இதுபோன்ற துர்பாக்கிய சம்பவங்களும் நடந்து விடுவது உண்டு. எனவே பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.