ஆவடி அருகே படிக்க விரும்பாத 12-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி அருகே படிக்க விரும்பாத 12-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்து உள்ள கோவர்த்தனகிரி செல்வா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் விஜயன் (47). இவர், தனியார் தொழிற்சாலை ஒன்றியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு பாலாஜி (17) என்ற மகனும், ஹரிணி (15) என்ற மகளும் உண்டு. இதில், பாலாஜி ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12. வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை விஜயன், அவருடைய மனைவி ஜெயலட்சுமி இருவரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்திற்கு புத்தாடைகள் எடுக்க ஆவடி கடை வீதிக்கு சென்றுள்ளனர் .வீட்டில் பாலாஜி மற்றும் அவரது தங்கை ஹரிணி இருவர் மட்டும் இருந்தனர். இந்த நிலையில் பாலாஜி, அறைக்குள் சென்று கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனை கவனித்த தன் அண்ணன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராத காரணத்தினால் ஹரிணி, கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தார்.
அப்போது பாலாஜி, அறைக்குள் இருக்கும் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த பாலாஜியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள் , அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி போலீசார், தற்கொலை செய்த பாலாஜி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரது அறையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் பாலாஜி ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் அவர், "நீங்கள் விரும்பும் படிப்பை எனக்கு படிக்க விருப்பம் இல்லை. என் இஷ்டத்துக்கு வாழ விடுவதில்லை. 30 வயதுக்கு மேல் திருமணமாகி வேலைக்கு போன பிறகு தான் நான் ஜாலியாக இருக்க முடியுமா?. நான் உயிருடன் இருந்து என்ன பண்ணப்போகிறேன். என் தங்கையாவது நன்றாக இருக்கட்டும்" என மன உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.