ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 ரவுடிகள் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது
சென்னை கொரட்டூரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.;
சென்னை கொரட்டூர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பன்ராஜ் (37). இவரது தம்பி விவேக் (30). இருவரும் ரவுடிகள். அப்பன்ராஜ் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல் விவேக் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த டிசம்பர் 3ம் தேதி ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் மேட்டுத் தெருவை சேர்ந்த ரவுடி ஆகாஷ்(25) என்பவரை நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி அப்பன்ராஜ், விவேக் ஆகியோர் வெட்டி கொல்ல செய்ய முயற்சித்தனர். இந்தக் கொலை முயற்சி தொடர்பாக, கொரட்டூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் இருவரும் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதனையடுத்து, கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் அப்பன்ராஜ், விவேக் இருவரையும் சிறையில் அடைக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு பரிந்துரை செய்தார். பின்னர், அவர் பரிந்துரையை ஏற்று இருவரையும் ஒரு வருடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அவர் உத்தரவிட்டார்.
மேலும், அப்பன்ராஜ், விவேக் இருவரும் கொலை முயற்சி வழக்கில் புழல் சிறையில் இருப்பதால், இந்த உத்தரவை கொரட்டூர் போலீசார் சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டு. இதனையடுத்து, இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.