அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்
ஆம்பூர் அருகே அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் அரசு அங்கன்வாடி மையத்தில் இன்று மதியம் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக குழந்தைகள் நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்ற போது ஆம்புலன்ஸ் திடீரென பழுதாகி நின்றது. பின்னர் குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் பின்னர் அரசு மருத்துவமனையில் குழந்தைகளிடம் நலம் விசாரித்து குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார் அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்
நரியம்பட்டு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையல் செய்த பின் கடைசி நேரத்தில் உணவில் சிறு பல்லி விழுந்துள்ளது, 24 பேர் அங்கிருந்த நிலையில், 5 குழந்தைகள் மட்டும் உணவு உட்கொண்ட போது, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு 24 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதே போன்று கடந்த மாதம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை உட்கொண்ட 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.