ஆம்பூரில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
ஆம்பூரில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.;
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள மலைகளை பனி சூழ்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாகவே கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பது கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டி வருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விடிந்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர்.
மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. காலை, மாலை பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்குகின்றனர். சூரியன் வந்த பிறகே, வீடுகளில் இருந்து வெளியில் வருகிறார்கள்.
கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்து உறைய வைக்கிறது. பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் வீதியிலும், வீட்டு முன்பும் குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை கொளுத்தி விட்டு குளிர் காய்கிறார்கள். கொட்டும் பனிக்கும், உறைய வைக்கும் குளிருக்கும் ஸ்வெட்டர், சால்வை விற்பனையும் சூடுபிடித்துள்ளது. நாட்கள் செல்ல செல்ல பனிப்பொழிவும், உறைய வைக்கம் குளிரும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனி கொட்டுவதால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.