வாணியம்பாடியில் இளைஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது
வாணியம்பாடியில் இளைஞர் கொலையில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 22). இவர் சென்னையில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இது தொடர்பான முன்விரோத தகராறில் முரளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகளை பிடிக்க வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் முரளி கொலை செய்த வழக்கில், பெண்ணின் அண்ணன் சந்தோஷ் (25) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த சூர்யா (24), அஜித் (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். வாலிபர் கொலை செய்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் முரளி கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த காடீஸ் என்கிற காட்வின் மோசஸ்(32), முரளி காதலித்த பெண்ணின் தம்பி ஏழுமலை (24) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே பைக் விபத்தில் பொறியாளர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், பெங்களூர் பத்மநாபன் நகரை சேர்ந்தவர் ஷாட்நாயக் மகன் அனிகேஷ் (வயது 29), சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் தனது பைக்கில் வேலூரில் இருந்து திருப்பத்தூரை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே வந்தபோது, பின்னால் வந்த கனரக லாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அனிகேஷ் சம்பவ இடத்திலேயே பரதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சசி மற்றும் சீனிவாசன். கட்டிட வேலை செய்யும் இவர்கள் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் சந்திப்பு சாலையில் இருந்து நெக்குந்தி நோக்கி டூவீலரில் சென்றுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டூ வீலர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி கீழே விழுந்துள்ளனர். அதில் சம்பவ இடத்திலேயே சீனிவாசன் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த சசி வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்!