ஆம்பூர் அருகே பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு
ஆம்பூர் அருகே 8 அடி நீள மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.;
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ளது காட்டுவெங்கடாபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் விவசாயி மோகன். இவருக்கு சொந்தமான நிலமும், கோழிப்பண்ணையும் ஊரை ஒட்டி உள்ளது. மோகன் குடும்பத்தார் இன்று அவரது வீட்டை ஒட்டி உள்ள நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 8 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கவனித்து கூச்சலிட்டுள்ளனர்.
மேலும் வாணியம்பாடி வனச்சரகர் குமாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாதகடப்பா பகுதியில் இருந்து வனத்துறையினர் வர தாமதமானது. இதனால் விவசாயி மோகன் அதே ஊரை சேர்ந்த இளைஞர்கள் துணையுடன், பாதுகாப்பாக மலைப்பாம்பை பிடித்தனர்.
பின்னர் அங்கு வந்த வனக்காப்பாளர் தினேஷ்குமாரிடம் பிடித்த மலைப்பாம்பை ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு அரங்கல்துருகம் அருகே உள்ள காரப்பட்டு காப்பு காட்டில் விடப்பட்டது.