ஆம்பூர் அருகே பாலாற்றில் தோல் கழிவுநீர்: விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆம்பூர் அருகே பாலாற்றில் தோல் கழிவுநீர் கலந்து பாலாறு முழுவதும் தண்ணீர் நுரை பொங்கி செல்வதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை;

Update: 2021-08-10 15:26 GMT

பாலாற்று பகுதிக்கு வந்து பார்வையிட்ட வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராபட்டு பகுதியில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் தற்போது பாலாற்றில் வெளியேற்றப்பட்டு உள்ளதால் பாலாற்று முழுவதும் உள்ள தண்ணீரில் நுரை பொங்கி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது.

தொடர்ந்து கனமழை பெய்தால்  தோல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பாலாற்றில் வரக்கூடிய மழைநீரை பயன்படுத்தி தொழிற்சாலையில் உள்ள தோல் கழிவுநீர் நேரடியாக பாலாற்றில் விடுவதாக  சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்

பாலாறு படுக்கையில் உள்ள விவசாய நிலங்களுக்கு  செல்லக்கூடிய இந்த மழைநீர்  தோல் கழிவுநீர் கலந்து விடுவதால் விவசாய நிலத்தில் பயிரிட்டு உள்ள அனைத்து பயிர்களும் நாசமாவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இந்த மழை நீரானது பாலாறு படுக்கையை ஒட்டி உள்ள ஏரிகளுக்கும் செல்வதால் இதனை குடிக்கக்கூடிய கால்நடைகளும் உயிரிழப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாய சங்கத்தினரிடம் கேட்டபோது நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கக்கூடிய பாலாற்று பகுதியில் நீர்வரத்து என்பது இல்லை. ஆனால் தற்போது வாணியம்பாடி தோல் தொழிற்சாலையில் கடந்து வரக்கூடிய கிரிசமுத்திரம், மாராபட்டு,  பகுதியில் மட்டும் பாலாற்றில்  வெள்ளம்போல் தண்ணீர்  நுரை பொங்கி வந்து கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டுகின்றனர்

இதைதொடர்ந்து பாலாற்று பகுதிக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி பாலாற்றில்  நுரை பொங்கி காட்சி அளிக்க கூடிய தண்ணீரை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டார்.

Tags:    

Similar News