ஆம்பூர் அருகே பாலாற்றில் ஆபத்தை உணராமல் செல்லும் மக்கள்
ஆம்பூர் அருகே பாலாற்றில் ஆபத்தை உணராமல் இடுப்பளவு தண்ணீரில் பொதுமக்கள் கடந்து செல்வதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர்-உள்ளி பகுதிகளை இணைக்கக்கூடிய பாலாற்று பாலம் இருந்தது. உள்ளி, பட்டுவம்பட்டி, ராசம்பட்டி, சின்ன தோட்டாளம் அலங்காநல்லூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாதனூர் பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி பயில்வதற்காக தினந்தோறும் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலத்தை கடந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் பாலாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாலம் உடைந்து அதில் ஒரு பகுதி நீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் அடித்துச் செல்லப்பட்டு பாலாற்று உடைந்த பாலத்தில் குறுக்கே நின்றுள்ளது. மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் அதன் மீது ஏறி இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று கரையை கடக்கின்றனர்.
ஆபத்தை உணராமல் பொதுமக்கள் இவ்வாறு ஆற்றை கடந்துவரும் நிலையில், உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சமந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலாற்றில் படிப்படியாக வெள்ளப்பெருக்கு குறைந்து வருவதால் பாலத்தை சீர் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.