ஆம்பூர் அருகே சினிமா பாணியில் காரை துரத்தி பிடித்த போலீசார்
ஆம்பூர் அருகே சினிமா பாணியில் காரை துரத்தி கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்த போலீசார்;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிலி பகுதியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டுப்புடவை வியாபாரியான கனகராஜ் என்பவரிடம் காரை வழிமறித்து, போலீசார் என கூறி நாடகம் ஆடி ஒரு கும்பல் வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓடியதாக கனகராஜ் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறிக் கொள்ளை நடைபெற்றதாக கூறப்படும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சொகுசு கார் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சொகுசு காரை துரத்தி பிடிக்க முயன்றபோது காரில் இருந்தவர்கள் காரை வேகமாக ஓட்டினர்.
ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக காரில் இருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்த காவல் துறையினர் காரை சோதனை மேற்கொண்டதில் காரில் இருந்த இரண்டு பைகளில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து காரில் இருந்த பெருமாள், சீனிவாசன், சதிஷ் ஆகிய மூன்று பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 3 பேரும் காவல்துறையினர் போல் நடித்து கள்ளநோட்டுகளை மாற்றுவது வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது.
மேலும் இவர்களுக்கு துணையாக செயல்பட்டுவந்த சரத், சதிஷ் , தினகரன் ஆகிய மூன்று பேரையும் அவர்கள் பயன்படுத்திய கார், 9 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போலீசார் துரத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் வழிப்பறி நடைபெற்றதாக புகார் அளித்த கனகராஜ், குணசேகரன் ஆகியோரிடமும் கள்ள நோட்டு மாற்றியது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.