பாலாற்றில் மூன்றாவது முறையாக திடீர்  வெள்ளப்பெருக்கு.

ஆம்பூர் அருகே தமிழக ஆந்திர எல்லைப்  பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாலாற்றில் திடீர்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

Update: 2021-11-05 12:02 GMT

வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்றாலும், ஆபத்தை உணராமல் செல்லும் பொதுமக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக  பெய்து வரும் தொடர் கன மழையால் ஆந்திர மாநிலம் நன்னியாலா நீர்வீழ்ச்சியில் இருந்து பெருங்கானாற்றில் வரும் வெள்ளம், கர்நாடகா மாநிலம் முல்பாகல் பகுதியில் உருவாகும் கைகல் நீர்வீழ்ச்சியில் இருந்து கொட்டாற்றில் வரும் நீர் ஆகியவை பேர்ணாம்பட்டு அருகே உள்ள மதினாப்பல்லி,  என்ற இடத்தில் இணையும்.

இந்த இரண்டு  கிளை ஆறுகளும்  நரியம்பட்டு, பச்சகுப்பம் வழியாக செல்லும் பாலாற்றில் சேர்வதால்,  வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ள நீர் தரைபாலத்தை கடந்து செல்வதால் ஆம்பூர் குடியாத்தம் செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

இதனால் அழிஞ்சிகுப்பம், ரெட்டிமாங்குப்பம் , கொத்தகுப்பம், மேல் வழித்துணையாங் குப்பம், ராஜக்கல்,புதூர், நாக தோப்பு, மேல்பட்டி கீழ்பட்டி, வளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஷூ மற்றும் தோல் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்லும் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணிகளுக்கு செல்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு 3வது முறையாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் சிக்கி தவித்ததால் காவல்துறை உதவியுடன் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கரை சேர்த்தனர். ஆனாலும்,  ஆபத்தை உணராமல் தரைப்பாலம் மீது வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.

Tags:    

Similar News