ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார். 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பெங்களூரை சேர்ந்த அஷ்ரபுல்லா என்பவர் குடும்பத்துடன் சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று பின்னர் அவர்களது சொந்த ஊரான பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கார் மாதனூர் அடுத்த தேவிகாபுரம் என்ற இடத்தில் வந்தபோது, திடீரென எஞ்சினில் இருந்து புகை வந்தது. அதனைப் பார்த்த அஷ்ரபுல்லா (வயது 46) என்பவர் உடனடியாக காரை நிறுத்தி அனைவரையும் கீழே இறக்கி உள்ளார்.
உடனடியாக தீ மளமளவென பரவி கார் முழுவதும் எரியத் தொடங்கியது. காரில் இருந்த 2 ஆண்கள் 2 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.