ஆம்பூர் அருகே ஊராட்சி செயலாளர் நியமனத்துக்கு எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம்

ஆம்பூர் அருகே பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.;

Update: 2021-08-11 12:45 GMT

ஊராட்சி செயலாளர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய கிராமத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம்  ஊராட்சியில் செயலாளராக 22 ஆண்டுகள்  ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்தவர் ராஜகம்பீரம். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை கையாடல் செய்து விட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் வீராங்குப்பம் மற்றும் சின்னவரிகம் பகுதியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளராக தற்போது பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து அங்கு ராஜகம்பீரத்தை நியமனம் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே தங்கள் பகுதியில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ராஜகம்பீரம் பல்வேறு ஊழலில் ஈடுபட்டுள்ளார். அதனால்  அவரை மீண்டும் தங்கள் பகுதிக்கு நியமனம் செய்துள்ளதை திரும்ப பெற்று வேறு யாரேனும் பணி அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி  ஊராட்சி அலுவலகம் முன்பாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News