ஆம்பூரில் மழையால் பாதித்த இடங்களில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
ஆம்பூரில் மழையால் பாதித்த இடங்களில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் விண்ணமங்கலம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து உள்ளது.
விண்ணமங்கலம் பகுதியில் அதனை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளரும் திருப்பத்தூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு கண்காணிப்பாளருமான ஜவஹர் ஆய்வு மேற்கொண்டார்.
உடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அதேபோல் பச்சகுப்பம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் மேம்பாலம் கட்டுவதற்கான கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் உடன் இருந்தனர்.