ஆம்பூரில் வேன், கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
ஆம்பூரில் வேன், கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கன்னிகாபுரம் முதல் சான்றோர்குப்பம் வரை கடந்த ஓராண்டு காலமாக தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை பெங்களூர் மற்றும் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் ஒரு வழிச்சாலையாக மாற்றியமைக்கப்பட்டு வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூரில் இருந்து ஆம்பூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேன் மூலம் 15க்கும் மேற்பட்டோர் வந்து கொண்டிருந்த போது, ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் பெண் உட்பட இருவர் குறுக்கே வந்ததால் அவர்கள் மீது மோதாமல் இருக்க வேன் திருப்பிய போது முன்னாள் சென்ற கார் மீது மோதியதால் அடுத்தடுத்து 3 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. வேன் மற்றும் கார்கள் கண்ணாடிகள் உடைந்தும், முன், பின் பக்கங்களில் சேதமடைந்தன.
மேலும் வேனில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர்த்தப்பினர். விபத்து குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.