தூய்மை பணியாளர்களின் மறுவாழ்வு சட்ட அமலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் மறுவாழ்வு சட்ட அமலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-05 09:56 GMT

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, முதலைப்படியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புகளில், தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கேசடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசின் திட்டங்கள் தூய்மைப்பணியாளர்களுக்கு, சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மனித கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்ட அமலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா, போலீஸ் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:-

தூய்மை பணியாளர்கள் நல ஆணையம் என்பது தூய்மை பணியாளர்களின் குறைகளை கண்டறிந்து நிறைவேற்றுவது மட்டுமல்லாது, அவர்களது வாழ்வியலை உயர்த்துவதே இதன் முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும் என்று பாரத பிரதமர் தெரிவித்துள்ளார். ஆணையம், தூய்மை பணியாளர்களுக்கான அடிப்படை வசதி, சம்பளம் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, அவர்களது தேவைகளை நிறைவேற்றி தரப்பட வேண்டும் என்பதை உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து 100 சதவிகிதம் தீர்வு காண வேண்டும். அவர்களது வீடு, குழந்தைகள் கல்வி, குடியிருப்பு பகுதியில் குடிநீர், மின்சார வசதிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கம்.

நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்துகளின் தூய்மை பணியாளர்களுக்கான சம்பளம் தடையின்றி வழங்கப்பட்டு வருவதையும், நேரடியாக வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறதா என்பதையும், அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, கட்டாயமாக மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மேலும், அவர்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் சுய தொழில் தொடங்க அரசு கடனுதவி வழங்குகிறது. தூய்மை பணியாளர்களின் மீது தனி கவனம் செலுத்தி, அரசின் திட்டங்கள் அனைத்தும் சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு இந்த ஆணையத்தால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்களுக்கான பி.எப் போன்றவை முறையாக பிடித்தம் செய்யப்படுவது குறித்து தகவல் அளிக்க வேண்டும். ஒப்பந்த முறையில் தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், கையுறைகள், மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும். இதில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது மாவட்டகலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட, முதலைப்பட்டியில் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். குடியிருப்பு பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களின் இல்லங்களில், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ சுமன், டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News