பள்ளி சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை

பள்ளி சிறுமிகளை குழுவாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2024-06-11 15:30 GMT

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியை சேர்ந்த, 13 வயது மற்றும் 12 வயது என, இரண்டு சிறுமிகளை, அதே பகுதியை சேர்ந்த சங்கர் (எ) சிவா, கோகுலகண்ணன், சண்முகம், பிரபு, மணிகண்டன், முத்துசாமி, வரதராஜ், சூரியா, பெரியசாமி, செந்தமிழ் செல்வன் மற்றும் இரண்டு சிறுவர்கள் என, மொத்தம், 12 பேர் கொண்ட கும்பல் ஆறு மாதமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு புறத்தொடர்பு அலுவலர் தீபா, ஒருங்கிணைந்த சகி சேவை மைய உறுப்பினர் வித்யா, சைல்டு லைன் உறுப்பினர் மோகனசெல்வி, வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர்  2010ம் ஆண்டு, அக்டோபர் 12ம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி, 8ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி என, அக்கா, தங்கை இருவரையும் 12 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக, ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கில் சம்மந்தப்பட்ட 2 பேர் சிறுவர்கள் என்பதால், வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து, 10 பேருக்கு, 11 வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணை முடிவடைந்து நீதிபதி முனுசாமி, இன்று தீர்ப்பளித்தார்.

அதில், குற்றவாளியான கோகுலகண்ணன் (எ) குருவிதலையன் என்பவருக்கு, 2 பிரிவின்கீழ் தலா, 20 ஆண்டுகள் என, மொத்தம், 40 ஆண்டு சிறை சிறை தண்டனையும், ரூ. 1,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதன்படி, 20 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து குற்றவாளி கோகுலகண்ணன் பலத்த பாதுகாப்புடன், சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே, சேலத்தான் (எ) வருதராஜ் (59), சங்கர் (எ) சிவா (29) ஆகியோருக்கு, கடந்த, ஏப்ரல் 29ம் தேதி, தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், கடந்த மே 14ம் தேதி, முதல் குற்றவாளியான சண்முகம் (44) என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News