நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-06-24 10:16 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 17 பயனாளிகளுக்கு, ரூ. 5.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 571 மனுக்களை அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டுள்ளதையொட்டி, அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் கடைகோடியில் உள்ள பொதுமக்களை சென்றடையும் வகையில், அனைத்து அரசு அலுவலர்களும் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார். 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 14 பேருக்கு செயற்கை கால், தாங்குகட்டை, காதொலிக்கருவி, மடக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. 2022, ஜூலை 22ம் தேதி, மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேரின் வாரிசுதாரர்கள். 2021 ஜனவரி 11ம் தேதி, நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் வாரிசு ஆகியோருக்கு தலா, ஒரு லட்சம் வீதம், 3 லட்சம் ரூபாய், முதல்வரின் பொது நிவராண தொகை என, மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சத்து 30,450 நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2022ம் ஆண்டுக்கு தமிழ் செம்மல் விருது பெற்ற புத்தக ஆசிரியர் பரணிராஜா, கலெக்டர் உமாவிடம் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

முன்னதாக, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார். டி.ஆர்.ஓ., சுமன், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் அருளரசு, சப் கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News