தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி: எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று எஸ்பி வேலுமணி கூறினார்.;
செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.பி. வேலுமணி.
மின்சார கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்சுணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கோவை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து, முன்னாள் அமைச்சரும், அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், தமிழகத்தில் பொதுமக்களை வஞ்சிக்கும் விதமாக திமுக அரசு சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தியதால் தமிழக மக்கள் சிரமப்படுகின்றனர். தமிழகத்தில் மீண்டும் வருகின்ற 2026 எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். தமிழகத்தில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இதனை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆகவே தமிழக மக்கள் 2026 ல் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தாமோதரன், அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.