பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
கேரள மாநிலத்தில் இருந்து கோழி தீவனம் ஏற்றுவதற்காக வந்த லாரி மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.;
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்து தமிழக கேரள எல்லை அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தென்னை மரத்தில் ஏறி கள் இறக்கம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த மாணவன் ஜீவாவுடன் பொள்ளாச்சி செல்வதற்காக தங்களது விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஜமீன் முத்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கேரள மாநிலத்தில் இருந்து கோழி தீவனம் ஏற்றுவதற்காக வந்த லாரி மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே ரமேஷ் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி தாலுகா காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுக்கா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவனும் கூலி தொழிலாளியும் பலியான சம்பவம் மீனாட்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை
கோவை மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு 07 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் ரவிக்குமார்(44) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்ற நிலையில், ரவிக்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 7 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.