முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் போக்குவரத்து மாற்றம்

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை வருகை தர உள்ளார்.

Update: 2024-03-12 15:45 GMT

முதலமைச்சர் ஸ்டாலின்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் நாளை நடைபெறும் அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அப்போது பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் அவர், முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்க உள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பொள்ளாச்சி பகுதியில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவை மாவட்ட காவல் துறையினர் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் காந்தி சிலையிலிருந்து பாலக்காடு ரோட்டில் முத்தூரில் வலதுபுறம் திரும்பி டி. நல்லிகவுன்டன்பாளையம் வழியாக சி.கோபாலபுரம் சென்று வடக்கிபாளையம் சாலையை அடைந்து வடக்கிபாளையம் சென்று சூலக்கல் வழியாக ரூட்ஸ் கம்பெனியில் இடது புறம் திரும்பி கோவை செல்ல வேண்டும்.

கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி உடுமலை நோக்கி வரும் கனரக வாகனங்கள் கோவில்பாளையத்தில் இடதுபுறம் திரும்பி நெகமம் ரோட்டில் கக்கடவு வழியாக நெகமம் நால் ரோடு வந்து பல்லடம் பொள்ளாச்சி ரோட்டில் கரப்பாடி பிரிவு வழியாக அனுப்பர்பாளையம் திப்பம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.

மேலும், ஆனைமலை பாலக்காடு திருச்சூர் செல்லும் வாகனங்கள் நெகமம் ரோட்டில் நேராக புளியம்பட்டி தேர்நிலை வந்து பாலக்காடு சாலையில் செல்ல வேண்டும். கேரளாவிலிருந்து வாளையார் வழியாக கோவை வரும் கனரக வாகனங்கள் பாலத்துறை சந்திப்பு வழியாக அனுப்பப்படும். அவிநாசியிலிருந்து கோவை வரும் கனரக வாகனங்கள் கருமத்தம்பட்டி சந்திப்பு வழியே அனுப்பப்படும். திருச்சி சாலை வழியே கோவை வரும் வாகனங்கள் காரணம்பேட்டை சந்திப்பு வழியே அனுப்பப்படும்.

கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி உடுமலை நோக்கி வரும் இலகுரக வாகனங்கள் குள்ளக்காபாளையம் பிவிஎன் பள்ளி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தொப்பம்பட்டி வந்து நெகமம் ரோட்டில் பொள்ளாச்சி அடைய வேண்டும். பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் வடக்கிபாளையம் பிரிவில் இடதுபுறம் திரும்பி வடக்கிபாளையம் ரோட்டில் வடக்கிபாளையம் சென்று சூலக்கல் வழியாக ரூட்ஸ் கம்பெனியில் இடது புறம் திரும்பி கோவை ரோட்டை அடைந்து கோவை செல்ல வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News