பொள்ளாச்சியில் போதை ஊசிகளை விற்பனை செய்தவர் கைது

போதை ஊசி வாங்குவதை போல மாறுவேடத்தில் சென்ற காவல் துறையினர், போதை ஊசி வைத்திருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்;

Update: 2024-07-03 05:00 GMT

கைது செய்யப்பட்டவர்

கோவை மாவட்டத்தில் கஞ்சா, போதை ஊசி உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதேபோல தொடர்ந்து போதைப்பொருட்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் பழைய குற்றவாளிகள் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமாருக்கு போதை ஊசி விற்பனை செய்வது குறித்த ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் வெங்கடேச காலனி பகுதியில் போதை ஊசி மற்றும் குப்பிகளை ஒருவர் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து போதை ஊசி வாங்குவதை போல மாறுவேடத்தில் சென்ற காவல் துறையினர், போதை ஊசி வைத்திருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில்  அந்த நபர் சூளேஸ்வரன் பட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பது தெரியவந்தது. பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த போதை ஊசி மற்றும் குப்பிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News