உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

Update: 2024-10-03 14:00 GMT

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உப்பாறு அணை உள்ளது. திருமூர்த்தி அணையின் உபரி நீரை சேமிக்கும் வகையில் இந்த அணை கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது. அதோடு அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங்களால் தடுப்பணைகள் கட்டப்பட்டதால், அணைக்கு வரக்கூடிய மழைநீரும் வராமல் போய்விட்டது. அணையின் நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால் உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உப்பாறு அணையை நம்பியுள்ள விவசாயிகள் திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசன திட்டத்தில் உபரி நீரை திறந்து விடக்கோரி, பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும் போது திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக் கூறி, கடந்த ஒரு வருடமாக அப்பகுதி விவசாயிகள் நாங்கள் போராடி வருகிறோம். விவசாயிகள் தங்கள் கால்நடைகள் மற்றும் குடிநீருக்கு பணம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளோம். ஆனால் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். தற்போது பெய்த பருவமழை காரணமாக பிஏபி திட்டத்திற்குட்பட்ட அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளது. எனவே உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். அதிகாரிகள் சுமூகமான முடிவை எடுக்காவிடில் காத்திருப்பு போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

Tags:    

Similar News