பொள்ளாச்சியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
Coimbatore News- பொள்ளாச்சியில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோ ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.;
Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டத்தின் போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் மாக்கினாம்பட்டி அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பொள்ளாச்சி பகுதியில் சேர்ந்த சேக்பரீத் (23) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோ ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது உத்தரவின் பேரில், கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 109 நபர்கள் மீது 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 188.725 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.