பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
1கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.;
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் பொள்ளாச்சி மார்க்கெட் சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அழகர்சாமி (54) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட அழகர்சாமியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல் துறைக்கு கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.